நாடு முழுவதும் பகுதி வாரியாக பள்ளிகள் திறப்பு

நாடு முழுவதும் அரசு அனுமதியுடன் பகுதி வாரியாக திறக்கப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர்களை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் சந்தித்து பேசினர்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு பரவ தொடங்கிய சூழலில் கடந்த மார்ச் இறுதியில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடும்படி மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால், 10ஆம் வகுப்பு பொது தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளும் தள்ளி போடப்பட்டன.

இதன்பின்னர் பல மாநிலங்களில் தேர்வு எழுதிடாமல் மாணவர்கள் தேர்ச்சி பெற்று விட்டனர் என அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், பொருளாதார மந்தநிலை, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம் ஆகியவற்றை சுட்டி காட்டி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த மாத தொடக்கத்தில், பள்ளி கூடங்களை பகுதி வாரியாக திறப்பதற்கான நடைமுறை வழிகாட்டிகளை அரசு வெளியிட்டது. இதன்படி, பெற்றோர் அல்லது காப்பாளர்கள் அளிக்கும் எழுத்துப்பூர்வ ஒப்புதலின்பேரில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்கள் ஆசிரியர்களை சந்தித்து வழிகாட்டுதல்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து நாடு முழுவதும் பல மாநிலங்களில் பகுதி வாரியாக பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இதன்படி, மாணவ மாணவியர்கள் ஆசிரியர்களை இன்று சந்தித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.