TNK: எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக நீதி கட்சி சார்பாக பத்து தொகுதிகளில் போட்டி

TNK to contest in ten constituencies in the upcoming Tamil Nadu assembly elections
Image credit to original source

TNK: பெருந்துறையில் “தமிழக நீதிக்கட்சி” என்ற பெயரில் புதிய கட்சி அறிவிப்பு!! வரும் 20ம் தேதி கட்சியின் தொடக்க விழா நடத்த ஏற்பாடு பெருந்துறையில் “தமிழக நீதிக் கட்சி” என்ற புதிய கட்சியின் அறிமுக நிகழ்ச்சி கூட்டம் நடைபெற்றது.
புதிய கட்சியின் பெயரை அறிவித்த அக்கட்சியின் நிறுவனத் தலைவர் வாழவந்திநாடு சரவணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தமிழக மக்களின் நன்மையை கருத்தில் கொண்டு புதிதாக “தமிழக நீதிக் கட்சி” என்ற கட்சியை தொடங்கியுள்ளோம். இதன் நிறுவனத் தலைவராக நானும், பொதுச்செயலாளராக பாஸ்கரன், தலைவராக ஜெகன், பொருளாளராக சசி ஆகியோர் உள்பட 15 மாவட்டங்களின் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளோம்.

இந்தக் கட்சியின் பெயரை இன்று (நேற்று) அறிவித்திருக்கிறோம். கட்சியின் தொடக்க விழா வரும் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் பெருந்துறை, விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் உள்ள சமூக நீதித் திடலில் முறைப்படி தொடங்கி வைக்கப்படும். இந்த தொடக்க விழாவில் கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகளை விளக்குவோம்.

TNK to contest in ten constituencies in the upcoming Tamil Nadu assembly elections
Image credit to original source

கட்சியை தொடங்குவதற்கான காரணம், இன்றைய தினம் சமூக நீதிப் பேசும் கட்சிகள் எதுவும் சமூக நீதியுடன் செயல்படுவதில்லை. தமிழ்நாட்டில் 450-க்கும் மேற்பட்ட சாதிகள் இருக்கும் நிலையில் சாதியில்லை; மதம் இல்லை என்று கூறும் பல்வேறு கட்சிகளும் ஜாதி அரசியலைத் தான் செய்து வருகின்றன.

நாங்கள் ஜாதி இல்லை என்று கூறி அரசியல் செய்ய வரவில்லை. அனைத்து சமுதாயத்தினரும் சமமாக வாழ அரசியலில் அதிகார பகிர்வு சமமாக கிடைக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான சமூக நீதி கிடைக்கும். அதை யாரும் செய்யாததால் இதனை கருத்தில் கொண்டே புதிய கட்சியை தொடங்கி இருக்கிறோம்.

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் 10 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து அதற்கான நிர்வாகிகளை நியமித்து வருகிறோம். இந்தத் தேர்தலில் எங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடத் தயாராக இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் 400க்கும் மேற்பட்ட சமுதாயங்கள் இருக்கும் நிலையில் 10 முதல் 15 சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகார பகிர்வை கையில் எடுத்து, ஆட்சியில் பங்கேற்று வருகின்றனர். அதில் மாற்றத்தை ஏற்படுத்தவும் அதிகாரத்தை பரவலாக்கவும் நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம். அதிகாரப் பரவலை மேற்கொள்ள சட்டமன்ற உறுப்பினராக இருந்து சட்டமன்றத்தில் குரல் கொடுத்தால்தான் அது நடக்கும். அதற்காகத்தான் கட்சியை தொடங்கி இருக்கிறோம். தற்போது அதிகாரத்தில் உள்ள சமுதாயத்தினருக்கு எதிரானவர்களாக நாங்கள் செயல்பட மாட்டோம்.

வரும் தேர்தலில் கோபி, பவானி, பவானிசாகர், மொடக்குறிச்சி, குமாரபாளையம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், கரூர், அரவக்குறிச்சி, கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவோம்.

இன்றைக்கு சித்தாந்த ரீதியிலான அரசியலை விட பணத்தை வைத்து நடக்கும் அரசியலே மேலோங்கி நிற்பதால் எங்களுக்கு அடிப்படையான வாக்காளர்கள் எந்த தொகுதியில் அதிகமாக இருக்கிறார்களோ அந்த தொகுதியில் தான் நாங்கள் முதலில் போட்டியிட முடியும்.

நான் சார்ந்துள்ள வேட்டுவ கவுண்டர் சமுதாயத்தில் ஏற்கனவே பல்வேறு சமுதாயப் பணிகளை செய்து இருப்பதால் இந்த சமுதாயத்தைச் சேர்ந்த 25 லட்சம் வாக்காளர்களின் ஆதரவோடு, பிற சமுதாயத்தினரின் ஆதரவையும் பெற்று அரசியல் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம்.

எங்கள் களப்பணியை பொறுத்து போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
வேட்டுவ கவுண்டர் சமுதாயத்தினருக்கான கட்சி என்ற ஒரு கூண்டுக்குள் எங்களை அடைக்க வேண்டாம். எல்லா சமுதாயத்திற்கான சமூக நீதியை நிலை நிறுத்துவதே எங்கள் நோக்கம்.

வரும் தேர்தலில் கூட்டணிக்காக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசுவீர்களா? என்று கேட்கிறீர்கள். அவருக்கு தேவைப்பட்டால் எங்களை சந்தித்து பேசலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.