Turkey Syria Earthquake: துருக்கியில் நிலநடுக்கத்தால் 33,000 ஐ கடந்த உயிரழந்தோர் எண்ணிக்கை

அங்காரா: The death toll from the devastating earthquake in Turkey and Syria has exceeded 33,000. துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் உயிரிழந்ததோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என ஐநா தெரிவித்துள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. மேலும் அதே நாளில் 7.5 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அன்று இரவே 3வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6ஆக பதிவாகியது. ஒரே நாளில் அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தால் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாயின.

இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் தெற்கு , மத்திய பகுதி மற்றும் சிரியாவின் வடக்குப் பகுதிகள் மிக கடுமையான பாதிப்புக்குள்ளாகின. இந்தநிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்துள்ளது. துருக்கியில் மட்டும் உயிரிழப்பு 29,000 ஆயிரத்தை கடந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 3,500 தாண்டியுள்ளது. சேதமடைந்த கட்டிட இடிபாடுகளை மீட்பு படையினர் தொடர்ந்து அகற்றி மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க பல்வேறு நாடுகளில் இருந்து மீட்பு படையினர் துருக்கி சென்றுள்ளனர். நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. அமெரிக்காவும் மீட்புப் பணிகளில் துருக்கி, சிரியாவுக்கு உதவி வருகிறது. உலக வங்கி சார்பில் 1.18 பில்லியன் அமெரிக்க டாலர்களை உதவியாக வழங்கியுள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ள நிலையில், நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவக் குழுவினருடன் சென்ற இந்திய விமானப்படையின் 6 விமானங்கள் துருக்கி யில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன. துருக்கி மற்றும் இந்தியா இடையிலான நட்பை உறுதி செய்யும்வண்ணம் இந்த அவசர கால நிவாரண குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதற்கு “ஆபரேசன் தோஸ்த்” என்று பெயர் வைத்துள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

23 மில்லியன் மக்கள் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால் உலக நாடுகள் அனைவரும் மருத்துவ மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ளுமாறு உலக சுகாதார நிறுவனம் அழைப்பு விடுத்தது. இந்தியா நிலநடுக்கம் ஏற்பட்டவுடனே மீட்பு குழுவினர் , உணவு மற்றும் மருத்துவ குழு, படுக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய குழுவை அனுப்பியது.

இந்த நிலையில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. மீட்பு பணிகளுக்கான ஐநாவின் தலைமை அதிகாரி மார்ட்டின் கிரிஃபித் பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்க வாய்ப்புள்ளது என கணித்துள்ளார். தெர்கு துருக்கியில் அவர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். துருக்கிய அரசு கட்டடங்களை கட்டிய 113 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.