ICC Women’s T20 World Cup: மகளிர் டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

கேப் டவுன்: India beat Pakistan by 7 wickets in Women’s T20 World Cup. உலக கோப்பை மகளிர் டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் 8வது மகளிர் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. 10 அணிகள் இடம்பெற்ற இந்த போட்டியில், குரூப் ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேச அணிகள் ஆகிய இடம் பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

இதனிடையே நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் ஜவேரியா கான் 8 ரன்களும், முனீபா அலி 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த நிதா தர் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.விக்கெட்டுகள் இழந்தாலும் அணியின் கேப்டன் பிஸ்மா மரூப் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர் அரைசதம் அடித்து அசத்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 149 ரன்கள் எடுத்தது. பிஸ்மா மரூப் 68 ரன்களும் , ஆயிஷா நசீம் 43 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் ராதா யாதவ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து 150 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 19 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றிப்பெற்றது. இந்திய வீராங்கனை ஜெமீமா ரோட்ரிக்ஸ் அரை சதம் அடித்து 53 ரன்கள் எடுத்தார். ஷஃபாலி வர்மா 33 ரன்களும், ரிச்சா கோஷ் 31 ரன்களும் , யாஸ்திக பாட்டியா 17 ரன்களும், கவுர் 16 ரன்களும் எடுத்தனர். இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றிப் பெற்றது.