School Admission with Stick and Affirmation: பிரம்பு கம்பு, உறுதிமொழியுடன் மகனை பள்ளியில் சேர்த்த பெற்றோர்: மதுரையில் பரபரப்பு

மதுரை: School Admission with Stick and Affirmation in madurai. மதுரையில் புதிதாக பள்ளியில் சேர்ந்த தனது மகனை நன்றாக படிக்க வைக்க பிரம்பு கம்புடன் உறுதிமொழி பத்திரத்தை ஆசிரியரிடம் பெற்றோர் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பள்ளிகளில் ஆசிரியர்கள் பிரம்பு கம்புகள் மற்றும் சாட்டைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு சட்டத்தின்படி மாணவர்களை ஆசிரியர்கள் எவ்வித காரணங்களுக்காகவும் பிரம்பால் அடிக்க கூடாது. உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தும் வகையில் தண்டனை வழங்க கூடாது.

தவறு செய்யும் மாணவர்களை அடித்தாலோ, தகாத வார்த்தையால் திட்டினாலோ சட்டப்படி குற்றம். தவறு செய்தவர்களை அழைத்து “கவுன்சிலிங்’ கொடுத்து நல்வழிப்படுத்த வேண்டும். இதை மீறும் ஆசிரியர் மீது மாணவர்கள் புகார் அளித்தால் அந்த ஆசிரியருக்கு சிறை தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.விளையாட்டில் திறமை உள்ள மாணவரை உடற்கல்வி ஆசிரியர்கள் கண்டறிந்து, ஊக்கப்படுத்த வேண்டும் தமிழக உத்தரவிட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்வதும் சிறையில் அடைப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அச்சமடைந்த ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பதையே தவிர்த்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த சங்கரபாண்டியன் – தமிழரசி என்ற தம்பதியினர் தனது 4 வயது மகனான சக்தி என்ற சிறுவனை இன்று மதுரை செல்லூர் பகுதியில் உள்ள மனோகரா நடுநிலைப்பள்ளியில் புதிதாக பள்ளியில் சேர்த்தனர்.

அப்போது 4 அடி உயரமுள்ள பிரம்பு கம்பையும், பெற்றோர் உறுதிமொழி மனுவையும் தலைமை ஆசிரியரிடம் வழங்கி தனது மகன் தவறு செய்தால் இந்த பிரம்பை கொண்டு அடிக்க வேண்டும் எனவும், அப்போது தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று உறுதிமொழி பத்திரத்தில் எழுதிகொடுத்தனர்.

ஆசிரியர்கள் கண்டிப்பில் தான் சிறந்த மாணவனை உருவாக்க முடியும் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்று முன்மாதிரியாக தனது மகனை பள்ளியில் சேர்த்ததாக பெற்றோர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இது தற்போது வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.