நீட்தேர்வு அதிகரிக்கும் தற்கொலைகள் – அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

நீட்தேர்வு அச்சத்தால், மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்துகொண்டதற்கு மத்திய அரசே காரணம் என தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

நீட்தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், மதுரையைச் சேர்ந்த  மாணவி ஜோதிஸ்ரீ துர்கா, தேர்வு அச்சத்தால், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து நிகழும் இதுபோன்ற மாணவ-மாணவியரின் தற்கொலைக்கு மத்திய அரசே காரணம் என அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வு மாணவர்களை நிலைகுலைய வைப்பதாக இருக்கிறது என்பதை அனிதா மரணம் முதல் ஜோதிஸ்ரீ துர்காவின் மரணம்வரை உணர முடிவதாக கூறியுள்ளார்.

ஜோதிஸ்ரீதுர்காவின் தற்கொலை முடிவு அதிர்ச்சியளிப்பதாக வேதனை தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், தற்கொலை என்பது தீர்வல்ல என்றும், நீட் ஒரு தேர்வே அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், மதிமுக தலைவர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பாஜக அரசின் நீட் தேர்வு திணிப்பால், மாணவ-மாணவியர் தற்கொலை அதிகரித்துவருவது அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார்.

மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு பிடிவாதமாக இருப்பதன்மூலம் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப் போகிறார்களோ? எனவும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் கொடூரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு ஆயத்தமாக இல்லை எனக் குற்றம்சாட்டியுள்ள வைகோ, நீட் தேர்வு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட்டால் மட்டுமே இதுபோன்ற உயிர்ப்பலிகள் தடுக்கப்படுவதுடன் சமூக நீதியையும் நிலைநாட்ட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்

இதேபோல் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரும் ஜோதிஸ்ரீ துர்காவின் மரணத்திற்கு வேதனை தெரிவித்துள்ளதோடு, நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here