Gotabaya Rajapaksa : ஜூலை 13-ல் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலகல்: அந்நாட்டு நாடாளுமன்ற அவைத் தலைவர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தகவல்

கொழும்பு: Sri Lanka President Gotabaya Rajapaksa : ஜூலை 13-ஆம் தேதி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலக உள்ளதாக‌ அந்நாட்டு நாடாளுமன்ற அவைத் தலைவர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தகவல் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக் கோரி போராட்டம் நடந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை போராட்டக்காரர்கள் அதிபரின் மாளிகையை முற்றுகையிட்டதோடு, உள்ளே புகுந்தனர். இதற்கு முன்பாகவே அதிபர் கோத்தபய ராஜ்பட்ச அந்த மாளிகையிலிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதைத் தொர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் தனிப்பட்ட இல்லத்திற்கு திரண்டனர். இல்லத்துக்கு முன்னால் பாதுகாப்பு படையினர் தனியார் தொலைக்காட்சியின் ஊழியர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் 4 பேர் காயமடைந்ததால், ஆத்திரமடைந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரணில் விக்ரமசிங்கேவின் இல்லத்திற்கு தீ வைத்தனர். கொளுந்துவிட்டு எரிந்த தீயை பின்னர் தீயணைப்பு படையினர் அணைத்தனர்.

இந்நிலையில் தப்பியோடியதாக கூறிய கோத்தபய ராஜபட்ச ஜூலை 13-ஆம் தேதி அதிபர் பதவிலிருந்து விலகுவதாக தன்னிடம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற அவைத் தலைவர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தகவல் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக அத்தியாவசியப் பொருள்கள், பெட்ரோல், டீசலின் விலை உயர்ந்து, அவை கிடைப்பதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அந்நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து அந்நாட்டு அதிபர் பதவி விலகக்கோரி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை திரளாக சென்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிபரின் மாளிகையை முற்றுகையிட்டு கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து பிரதமர் விக்ரமசிங்கேவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டது.