Former Japan PM Shinzo Abe : ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மர்மநபரால் சுடப்பட்டார்: அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

ஜப்பான் : Former Japan PM Shinzo Abe : ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மர்மநபரால் சுடப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, மேற்கு ஜப்பானின் நாரா நகரில் அடையாளம் தெரியாத நபரால் சுடப்பட்டதாக கூறப்படுகிறது, வெள்ளிக்கிழமை அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும், துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக‌ சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாக 41 வயதுடைய‌ நபர் ஒருவரை கைது செய்துள்ள‌தாக போலீஸார் தெரிவித்தனர். அந்த‌ நபரின் பெயர் டெட்சுயா யமகாமி என்றும், அவர் அபே மீது அதிருப்தியடைந்ததாகவும், அவரைக் கொல்ல விரும்பியதாகவும் போலீஸாரிடம் கூறியதாக கூறப்படுகிற‌து. ஜப்பானின் முன்னணி செய்தி நிறுவனமான கியோடோ நியூஸ், அபே சுயநினைவின்றி இருப்பதாகவும், உடலில் எந்த அசையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

ஜப்பான் நாட்டின் மேல்சபைக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த‌ நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று காலை நாரா பகுதியில் பிரச்சாரத்தில் காலை 11.30 மணியளவில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தப்போது, அவரின் அருகில் இருந்த‌ நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட‌ 67 வயதான அபேவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், ஜப்பானின் ஜனநாயகத்தின் அடித்தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயை சுட்டதாக கைது செய்யப்பட்ட டெட்சுயா யமகாமி, முன்னாள் கடற்சார் தற்காப்புப் படையைச் சேர்ந்தவர் என்று ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தற்போது இணையதளங்களில் ஹின்சோ அபே சுடப்பட்ட காணொலி காட்சி வெளியாகி உள்ளது. ஜப்பானிய ஊடகங்களின் மூலம் வெளியாகி உள்ள அதில், ஹின்சோ அருகில் நின்றிருந்த‌ டெட்சுயா யமகாமி, திடீரென தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுடுவதும், இதையடுத்து அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடுவதையும் காண முடிகிறது.