வடமாநில இளைஞர்கள் விற்பனை செய்யும் பானி பூரி மசாலாவில் புழு

சென்னை அம்பத்தூர் பகுதியில் வடமாநில இளைஞர்கள் சிலர் கடந்த சில வருடங்களாக மாலை நேரங்களில் பானி பூரி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் மதியம் 2 மணிக்கே விற்பனையைத் தொடங்கிவிடும் அவர்களிடம் அருகிலுள்ள கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகளவில் பானி பூரி சாப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்றைய தினம் கருக்கு பகுதியில் வழக்கம்போல் பானி பூரி விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வடமாநிலத்தவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கூட்டமாக பானி பூரி சாப்பிட சென்றிருக்கின்றனர்.

அப்போது வடமாநில நபர் பானி பூரிக்குள் வைத்துக் கொடுத்த உருளைக்கிழங்கு மசாலாவில் துர்நாற்றம் வீசியிருக்கிறது. அதையடுத்து, தள்ளு வண்டியில் வைக்கப்பட்டிருந்த உருளைக்கிழங்கு மசாலாவை இளைஞர்கள் பரிசோதித்துப் பார்த்திருக்கின்றனர்.

அப்போது, அதில் புழுக்கள் ஊர்ந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து போனவர்கள் அதை விற்பனை செய்த வடமாநில நபரை மிரட்டி விசாரித்த போது, அவர்கள், கடந்த சில நாள்களாக வியாபாரம் இல்லாததால் மீதமாகும் வேகவைத்த உருளைக்கிழங்குகளை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தி வருவதாகக் கூறியிருக்கின்றனர்.

அதைக் கேட்டு ஆத்திரமடைந்த இளைஞர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பானி பூரி விற்பனை செய்த வடமாநில இளைஞரை அடித்து உதைத்து இரண்டு கைகளையும் கட்டி விட்டு, பட்டரைவாக்கம் பகுதியில் பானி பூரி தயாரிக்கும் இடத்திற்கே சென்று அந்த தள்ளு வண்டியின் உரிமையாளரையும் பிடித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஹோட்டல்களில் கெட்டுப்போன 8 கிலோ சிக்கன் பிரியாணி..!