சசிகலா ஆதரவாளர்களின் 2 கார்கள் தீயில் எரிந்து சேதம்..!

சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா தண்டனை காலம் முடிந்து கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டார்.

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த வாரம் டிஸ்ஜார்ச் செய்யப்பட்டதை தொடர்ந்து, கொரோனா தொற்கு காரணமாக பெங்களூரு விடுதியில் தனிமைபடுத்தப்பட்டார்.

தொடர்ந்து தனிமைபடுத்துதல் முடிந்து சசிகலா இன்று சென்னை திரும்பியுள்ளார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பெங்களூருவில் இருந்து தமிழகம் வரும் பாதை அனைத்திலும் அமமுக தொண்டர்கள் காத்திருக்கின்றனர். அவர் சென்னை வரும்போது அவரது காருக்கு பின்னால் 5 கார்கள் மட்டுமே வரவேண்டும் என்றும், பேனர்கள், பட்டாசு ஆகியவை பயன்படுத்த கூடாது என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. முக்கியமாக தமிழக எல்லையில் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது.

ஆனால் காவல்துறை எச்சரிக்கையை மீறிய சசிகலா, அதிமுக கொடி பொருத்திய காரில் பெங்களூருவில் இருந்து புறப்பட்டார். அவருக்கு பின்னால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பின்தொடர்ந்தன. அவர் பெங்களூவில் இருந்து புறப்படும் போது, கர்நாடக அதிமுக, சார்பில், ஆரத்தி எடுத்து உற்சாகமாக வழியனுப்பி வைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சசிகலா காரில் வந்துகொண்டிருந்தபோது, பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.

ஆனால் சசிகலா ஆதரவாளர்கள் அவரை விரட்டியடித்துள்ளனர். இதையறிந்த சசிகலா காரை நிறுத்தி, கீழே இறங்கி அந்த இளைஞரை அழைத்து அவருடன் செல்பி எடுத்துக்கொண்டார். மேலும் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே சசிகலா ஆதரவாளர்கள் பட்டாசு எடுத்து வந்த காரில் தீ விபத்து ஏற்பட்டது.

பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் சசிகலா ஆதரவாளர்களின் 2 கார்கள் தீயில் எரிந்து சேதம் ஏற்பட்டுள்ளது.