தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்களிக்கவில்லை..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த், வாக்களிக்க வராததால் அக்கட்சி  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர்.

இந்நிலையில், விருகம்பாக்கத்தில் உள்ள காவேரி பள்ளியில், நேற்று காலை 7 மணிக்கு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மட்டும் வந்து வாக்களித்தார். அத்துடன் “விஜயகாந்தும், தன் மகன்களும் பின்னர் வந்து வாக்களிப்பார்கள்” என கூறிச் சென்றார். அதனைத் தொடர்ந்து, பிற்பகலில் விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோர் வந்து வாக்களித்துச் சென்றனர்.

அப்போது, ‘விஜயகாந்த் மாலையில் வந்து வாக்களிப்பார்’ என விஜய பிரபாகரன் கூறினார். இதனால் விஜயகாந்தின் வருகையை தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

தேர்தல் பிரச்சார காலத்தில், விஜயகாந்த் தேமுதிக தொண்டர்களையும் கூட்டணி கட்சியினரையும் ஆதரித்து  பிரச்சாரத்தில் ஈடுபட்டார். எனவே விஜயகாந்த் நிச்சயம் வாக்களிக்க வாக்குச் சாவடிக்கு வருவார் என தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்