அரசியலைவிட்டு விலகத் தயார்-எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேவராயபுரம் ஊராட்சியில், “அதிமுகவை நிராகரிக்கின்றோம்” என்ற பெயரில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில் மட்டும் பெரிய அளவில் அராஜகம் நடப்பதாகவும், அதற்கு காரணம் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியே காரணம் என்றும் சாடினார். திமுகவின் தேர்தல் அறிக்கையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்ற அம்சம் சேர்க்கப்படும் எனக் கூறிய அவர், முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கவே அதிமுக தவித்து வருவதாக விமர்சித்தார். இன்னும் நான்கு மாதங்களில் அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை நிரூபித்து தண்டனை வாங்கித் தருவோம் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

அதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண்மணி ஒருவர், கிராம சபை கூட்டத்தை எதற்கு நடத்துகிறீர்கள் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அந்த பெண்மணி கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

கூட்டத்தை விட்டு வெளியே வந்த பெண்ணிடம், அமைச்சர் பேசுவதாகக் கூறி ஒருவர் தனது அலைபேசியை கொடுத்து பேச வைத்தார். திமுகவினர் கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

அதேநேரம், பொதுமக்களின் கேள்விக்கு கூட மு.க.ஸ்டாலினால் பொறுப்புடன் பதிலளிக்க முடியாததால், அவர் தகுதியற்ற தலைவர் என அதிமுக விமர்சித்துள்ளது. இதனிடையே, திமுக கூட்டத்தில் இடையூறு செய்ய முயன்ற பெண் சுகுணாபுரத்தைச் சேர்ந்த பூங்கொடி என்பதும், அதிமுக-வின் மாவட்ட மகளிர் பாசறை அணியின் துணை தலைவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தன் மீது மு.க.ஸ்டாலின் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமில்லாதவை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என்றும் சவால் விடுத்துள்ளார். அத்துடன், மு.க.ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட பெண்னை வெளியேறியது கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார்.