திரையரங்கு இல்லாமல் சினிமா என்ற ஒன்று இல்லை- சிம்பு

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஈஸ்வரன்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் சிம்பு, பாரதிராஜா, நந்திதா, நிதி அகர்வால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் நடிகர் சிம்பு பேசுகையில், “‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்த கலைஞர்கள், தயாரிப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருடன் பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி.

இறைவனுக்கு மட்டும்தான் தெரியும் இந்தப் படம் எப்படி விரைவாக முடிந்தது என்று. ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு கரோனாவால் பாதியில் நின்றது. எனவே அந்தச் சமயத்தில் குறுகிய காலத்தில் முடிக்க வேண்டும் என்று இப்படத்தின் கதையை சுசீந்திரன் சொன்னதும் நடிக்க சம்மதம் தெரிவித்தேன்.

என்னுடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் நான் ஒன்று கூற விரும்புகிறேன். அனைவரும் உங்கள் உள்ளத்தை நன்றாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவரிடம் அறிவுரைக் கேட்பதை நிறுத்துங்கள்.

உங்கள் உள்ளத்தில்தான் இறைவன் இருக்கிறார். கரோனா காரணமாகச் சிலர் படங்களைத் திரையரங்கில் வெளியிடுகிறார்கள், சிலர் ஓடிடியில் வெளியிடுகிறார்கள். அது அவரவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால் திரையரங்கு இல்லாமல் சினிமா இல்லை.

எனது ரசிகர்களுக்கு ஒன்று மட்டும் கூற ஆசைப்படுகிறேன். இனிமேல் பேசுவதற்கு எதுவுமில்லை, செயல் மட்டும்தான். இந்த வருடத்திலேயே 3 படங்கள் வரவுள்ளன. ‘மாநாடு’, ‘பத்து தல’, அதற்கடுத்து ஒரு படம் இருக்கிறது. சுசீந்திரன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.