போரிஸ் ஜான்சன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்ததற்கு இதன் காரணமா?

எதிர்வரும் இந்திய குடியரசு தினத்தின்போது தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீரென தனது பயணத்தை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட்டதால், இந்த ஆண்டின் குடியரசு தினம் தலைமை விருந்தினரின்றி நடக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

உலகை புரட்டிப்போட்டிருக்கும் கொரோனா வைரஸ், தற்போது புதிய திரிபுவாக உருப்பெற்று பிரிட்டனில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அங்கு புதிய கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து நாடு முழுவதும் முழு பொது முடக்கத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த போரிஸ் ஜான்சன், தனது இந்திய வருகையை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

தனது பயணத்திட்டம், பிரிட்டனில் தீவிரமாகி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதியை செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது போரிஸ் ஜான்சன் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, 2021ஆம் ஆண்டின் குடியரசு தின தலைமை விருந்தினராக வருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோதி விடுத்த அழைப்பை பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஆண்டு ஏற்றுக்கொண்டிருந்தார். இதன் மூலம், 1993ஆம் ஆண்டில் ஜான் மேஜருக்குப் பிறகு இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கும் பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் விளங்குவதாக அறியப்பட்டது.