பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்தும் ஆலோசித்துதான் முடிவு எடுக்கப்படும்- அன்பில் மகேஷ்

தமிழகத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 1 கோடி பேர் ஆகும். பிளஸ்-2 வகுப்பில் மட்டும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் உள்ளனர்.

பள்ளி, கல்லூரிகளை திறப்பது பற்றி தமிழக அரசு மீண்டும் ஆலோசிக்க தீர்மானித்துள்ளது. தற்போது பொதுமுடக்கம் வருகிற 31-ந்தேதி வரை உள்ளது.

இந்த பொதுமுடக்கத்தில் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது பற்றி விரைவில் நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது பள்ளி, கல்லூரிகளை திறப்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக சென்னை முகப்பேர் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ”உயிர்கோள அடர்வனம்” திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிக்கூடங்கள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு தான் மிக முக்கியம்.

தற்போது கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த சூழலில் பள்ளிக்கூடங்கள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைப்படிதான் ஒவ்வொரு மாதமும் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்தும் ஆலோசித்துதான் முடிவு எடுக்கப்படும்.

தமிழகத்தில் முதலில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்களை திறக்கலாமா? என்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுப்பார்.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கும்போது ஆலோசிப்பது போல் பள்ளிக்கூடங்களை திறப்பது சம்பந்தமாகவும் ஆலோசித்துதான் முடிவு தெரிவிக்கப்படும். அந்த வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து விரைவில் அறிவிப்பார்.