நதிகள் இணைப்புத் திட்டம்: இன்று அடிக்கல் நாட்டும் முதலமைச்சர்

6,941 கோடி ரூபாய் மதிப்பிலான, காவிரி- வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல்கட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டையில் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

இதன் மூலம், கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 342 ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்படுவதுடன், 42,170 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன. தொடர்ந்து 2ம் கட்டமாக தெற்கு வெள்ளாற்றில் இருந்து 109 கிலோமீட்டர் தொலைவுக்கு வைகை ஆறு வரை கால்வாய் வெட்டப்பட உள்ளது. 3-ம் கட்டத்தில் வைகை ஆற்றில் இருந்து குண்டாறு வரை 34 கிலோமீட்டர் தொலைவுக்கு கால்வாய் வெட்டப்பட உள்ளது.

இப்பெருந்திட்டத்தின் முதல்கட்டமாக 6,941 கோடி ரூபாய் மதிப்பில் காவிரி-தெற்கு வெள்ளாறு- வைகை- குண்டாறு நதிகள் இணைப்பு பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார். மேலும், 3384 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உபவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள் கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.