வரும் 17-ந் தேதி மோடி மு.க.ஸ்டாலின் சந்திப்பு

17-ந் தேதி காலை 10.30 மணிக்கு டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்பின் போது பிரதமர் அலுவலக அதிகாரிகள், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோரும் உடன் இருப்பார்கள்.

மோடி-மு.க.ஸ்டாலின் இடையே நிர்வாக ரீதியாக நடைபெறும் இந்த சந்திப்பு சுமார் 1 மணிநேரம் நீடிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக நலன்கள் தொடர்பான திட்டங்கள் பற்றி பிரதமருடன் மு.க.ஸ்டாலின் பேச உள்ளார்.

தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை பெறுவது உள்ளிட்ட 25 அம்சங்கள் அடங்கிய கோரிக்கை மனுவையும் பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் அளிக்க உள்ளார். அப்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்பது போன்ற கோரிக்கைகளையும் பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் முன்வைக்கிறார்.

இதன் பிறகு பிரதமர் மோடியும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனியாக சந்தித்து பேசுகிறார்கள். இந்த சந்திப்பு 10 நிமிடங்கள் வரை நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.