கெட்டிமேளம் கொட்ட வேண்டுமா -வீழிநாதரை தரிசியுங்கள் !

இறைவன் -வீழிநாதேஸ்வரர்
இறைவி -அழகியமாமுலையம்மை

திருவீழிமிழலை என்னும் திருத்தலம்.இங்கு சிவன் சுயம்புவாக அருள்பாலிக்கிறார். இங்கு பாதாள நந்தி உள்ளது. முழு கோயிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் உள்ளது. இங்கு இறைவன் காசியாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளை கோலத்தில் அருள்பாலிப்பதால், மாப்பிள்ளை சுவாமி எனப்படுகிறார்.இறைவன் உமையை மணந்துக் கொண்ட தலம் என்னும நிலைக்கேற்ப, கர்ப்பக்கிருக வாயிலில் அரசாணிக்கால் என்னும் தூணும், வெளியில் மகாமண்டபத்தில் பந்தக்கால் என்னும் தூணூம் உள்ளன.

ஒருகாலத்தில் இத்தலம் முழுவதும் வீழி எனப்படும் சந்தனம், செண்பகம், பலா, விளா ஆகிய மரங்கள் அடங்கிய காடுகளாக இருந்தன. மிழலைக்குறும்பர் என்ற வேடுவர் இறைவன் மேல் கொண்ட அன்பினால் தினமும் விளாங்கனியை நைவேத்யம் செய்து வழிபட்டு வந்தார். இறைவன் அவரது அன்பிற்கு இரங்கி, அஷ்டமாசித்திகளை வழங்கினார்.வேடுவரால் நிவேதனம் செய்யப்பட்ட விளாங்கனி வீழிநாதரின் பாதத்தில் இன்றும் காட்சியளிக்கிறது. இதனால் இத்தலம் திரு+வீழி+மிழலை என்று அழைக்கப்படுகிறது.

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்
இத்தலத்தில் சிவ பெருமான் சுவேது கேதுவின் பொருட்டு எமனை காலால் எட்டி உதைத்து சிரஞ்சீவியாக வாழ் அருள் புரிகிறார் . அதனால் இத்தலம் எமபயம் நீக்கும் இடமாக விளங்குகிறது.

அமைவிடம்

மயிலாடுதுறை – திருவாரூர் இருப்புப் பாதையில் பேரளத்தையடுத்துள்ள பூந்தோட்டம் நிலையத்திலிருந்து 10 கி. மீ. தொலைவில் உள்ள தலம். திருவாரூர், கும்பகோணம், பேரளம், ஆடுதுறை, பூந்தோட்டம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.