அடுத்த 2 நாட்களுக்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் !

தமிழகத்தின் விழுப்புரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு நாட்களில் தென்தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்களான விழுப்புரம், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை பொறுத்தவரை தமிழகத்தில் 8 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாகவும், சென்னையில் இயல்பை விட 41 சதவீதம் அதிகமாக மழை கிடைத்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.