12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த திட்டம்- தமிழக அரசு

தமிழகத்தில் 12-ம் வகுப்புத் தேர்வுகளை நடத்தும் முடிவில் தமிழக அரசு உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘கடந்த சில தினங்களுக்கு முன்னர் 12-ம் வகுப்பு தேர்வு குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான மாநிலங்களில் 12-ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றே வலியுறுத்தின. ஆனால், பிரதமர் மோடி நேற்று 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார். இருப்பினும், மாணவர்களின் மதிப்பெண்களைக் கணக்கிடுவதில் சற்று குழப்பம் இருக்கவே செய்கிறது.

12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்து செய்யும் அதிகாரம் நம்மிடம் இருந்தாலும், மத்திய கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் சேர முடிவு செய்யும்போது அவர்களுக்கு தேர்வு முடிவுகள் அவசியமாகிறது. அதனால், முழுவதுமாக ஆலோசித்து முடிவு செய்யவேண்டிய அவசியம் உள்ளது. 12-ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்களிடம் ஆலோசித்து இரண்டு நாள்களில் பதிலளிகவேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார். அதனடிப்படையில், அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

இந்த இரண்டு நாள்களுக்குள் மற்ற மாநிலங்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்துப் பரிசீலனை நடைபெறும். பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்களிடம் கருத்துக்களை பெற்று அதன்அடிபடையில், தேர்வு நடத்தப்படுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்’ என்று தெரிவித்தார்.