மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறையால் தடுப்பூசி போடும் திட்டத்தை நிறுத்தும் நிலை உள்ளது என்று மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ‘செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி மையத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கடந்தவாரம் நான் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தேன். இந்த விவகாரம் தொடர்பாக, எங்கள் அரசாங்கத்தின் சார்பாக பிரதிநிதிகள் உங்களைச் சந்தித்திருந்தனர். செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை கையாளும் பொறுப்பை தமிழக அரசிடம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். மத்திய அரசு செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை எடுத்து நடத்தும் எண்ணத்தில் இருப்பதாக பின்னர் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நான் மீண்டும் வலியுறுத்துகிறேன், செங்கல்பட்டு வளாகத்தை மத்திய அரசு அல்லது மாநில அரசு யாரேனும் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். அதனை தாமதம் இல்லாமல் உடனடியாக செயல்படுத்தவேண்டும்.

அதேபோல, ஏற்கெனவே தமிழகத்துக்கு அனுப்பப்பட்ட தடுப்பூசிகள் முடிந்துவிட்டதால், போதிய தடுப்பூசிளை தமிழகத்துக்கு மத்திய வழங்கவேண்டும். தமிழகத்தின் மக்கள் தொகை மற்றும் கொரோனா பாதிப்பின் தன்மைக்கேற்ப கூடுதல் தடுப்பூசிகளை விரைந்து வழங்கவேண்டும். மத்திய அரசு மூலமும், பிற வழிகளிலும் தலா 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்கவேண்டும். கடந்த ஒரு மாத காலத்தில் என்னுடைய அரசாங்கம் எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மீதிருந்த தயக்கம் முற்றிலும் அகன்றுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் தொகைக்கு உரிய தடுப்பு மருந்துகளை வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். தமிழ்நாட்டுக்கு நிகராக உள்ள மாநிலங்களுக்கு வழங்கப்படும் அளவுக்கு ஏற்ப தமிழ்நாட்டுக்கும் தடுப்பூசி வழங்கப்படவேண்டும். தமிழ்நாட்டில் இருப்புள்ள தடுப்பூசிகள் முடியும் நிலையில் உள்ளது. எனவே, தடுப்பூசி போடுவதை உடனே நிறுத்தவேண்டிய சூழல் உள்ளது. எனவே, தமிழ்நாட்டுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். மேலும், ஜூன் மாதத்துக்கான தடுப்பூசிகளை முதல்வாரத்திலேயே அனுப்பவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.