பயங்கரவாத பட்டியலில் விடுதலை புலிகள்

பயங்கரவாதப் பட்டியலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை வைத்திருக்கும் பிரிட்டனின் மேல்முறையீட்டு ஆணையத்தின் முடிவை, இலங்கை பாராட்டியுள்ளது.

பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரீத்தி படேலுக்கு, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று (செப்., 3) அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:

பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இலங்கைக்கும் பிரிட்டனுக்கும் இடையே நிலவும் கூட்டுறவு மிகவும் பாராட்டத்தக்கது. சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதிலும் பொதுமக்களின் உயிருக்கு பயங்கரவாதத்தால் ஏற்படும் அச்சுறுத்தலைப் போக்குவதிலும் பிரிட்டனுடன் தொடர்ந்து இணைந்து செயல்படுவதில் உறுதியாக உள்ளோம்.விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள நிலையைத் தொடர பிரிட்டன் முடிவு செய்துள்ளது இந்த ஒத்துழைப்பின் ஓர் அங்கமாகும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 2000ம் ஆண்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், பிரிவு 7ன் கீழ் பிரிட்டனும் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.