ஸ்புட்னிக் இந்தியாவுக்கு எப்போது வரும்?

ரஷ்ய தடுப்பூசி ஸ்புட்னிக் வி இந்தியாவுக்கு எப்போது வரும் என்ற தகவலை ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை செயல் அதிகாரி கிரில் டிமிட்ரிவ் தெரித்துள்ளார்.

இந்தியாவில் இந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசியை மருத்துவ பரிசோதனை செய்து, வினியோகிக்கும் உரிமையை ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தின் படி, ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் 10 கோடி டோஸ்களை வினியோகிக்க வழிவகை செய்யப்பட்டது. பின்னர் இது 12.5 கோடி டோஸ்களாக அதிகரிக்கப்பட்டது. இந்தியா சமீபத்தில், இந்த கொரோனா தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்தது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவில் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இதுபற்றி டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பதிலில், “இந்த தடுப்பூசியின் முதல் தொகுப்பை நிதியாண்டின் முதல் காலாண்டில் பெறுவதுதான் எங்களின் இலக்கு. மே மாத இறுதிக்குள் அவற்றை பெறுவதற்கு முடிந்த வரை முயற்சி செய்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.