பாலியல் சர்ச்சைகளில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா கைது !

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் தான் சிவசங்கர் பாபா.அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் அவர் அத்துமீறி நடந்ததாக புகார்கள் வந்தன.

இதனால் பள்ளி நிர்வாகிகளுக்குத் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.

இதனை தொடர்ந்து சிவசங்கர் பாபா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இருவர் மீது பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், தொழில்நுட்பத் தகவல் சட்டம் உட்பட 9 பிரிவுகளின் கீழ் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் விசாரணை நடத்துவதற்காக, சிபிசிஐடி தனிப்படை டேராடூன் சென்றது.அப்போது சிவசங்கர் பாபா அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில், அவர் டெல்லியில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்த நிலையில், டெல்லி போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

அதன்பிறகு சிபிசிஐடி வசம் சிவசங்கர் பாபா ஒப்படைக்கப்பட்டார்.அங்கேயே அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தமிழகம் அழைத்து வரப்படுவார் என்று சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.