மத்திய அரசை கண்டித்த உச்சநீதிமன்றம்

வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்கவில்லையென்றால் அதனை நாங்கள் செய்வோம் என்று என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் காட்டமாக தெரிவித்துள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்துவது குறித்த வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக ஒரு மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை என்று நீதிபதி போப்டே கூறினார்.

போராட்டத்தை நிறுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று வினவிய நீதிபதிகள், பிரச்னைகளை தீர்க்க முடியாதது வருத்தமளிப்பதாகவும் கூறினர். போதுமான அளவுக்கு கலந்து ஆலோசிக்காமலேயே நிறைவேற்றப்பட்ட சட்டங்களால்தான் போராட்டம் நடந்து வருவதாக அட்டார்னி ஜென்ரலிடம் நீதிபதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

மேலும் உத்தரவுகள் மூலம் எதையும் சாதித்து விடலாம் என்று மத்திய அரசு நினைக்கக் கூடாது என்றும் கடுமையாக சாடினர். மக்கள் போராட்டம் நடத்த கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.