பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க புதிய முயற்சி!

பாதுகாப்புத்துறை ஆயுதங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சுயசார்புக் கொள்கை மூலம் இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக, ’ஆத்ம நிர்பார் பாரத் திட்டம்’ வகுக்கப்பட்டது. விண்வெளித்துறையில் தனியாருக்கு வாய்ப்பு, 100 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் தேசிய உள்கட்டமைப்புக் குழாய் திட்டம் என பல அறிவிப்புகள் இத்திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், ஆயுதங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் விதிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான ஆத்ம நிர்பார் பாரத்தை அடைய விதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றம் பேருதவியாக அமையும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது குறித்து தெரிவித்துள்ளார்.

மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கொள்முதல் விதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மாற்றம், உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனங்களை ஊக்குவிக்கும். ஆத்ம நிர்பார் பாரத்தை அடைய விதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றம் பேருதவியாக அமையும்” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, பாதுகாப்புத்துறை அமைச்சக அலுவலகம் புதிதாக மாற்றப்பட்ட விதிக்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.