ரஜினியின் 70-தாவது பிறந்தநாள் இன்று!!!

நடிகர் ரஜினிகாந்த் தனது 70-தாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றிய ரஜினி, பின்னாளில் வில்லன் வேடங்களில் நடித்து படிப்படியாக கதாநாயகன் ஆனவர். அவரது வேகமும் ஸ்டைலும் அவரை சூப்பர் ஸ்டார் எனும் சிம்மாசனத்தில் அமர வைத்தது. படிப்படியாக முன்னேறி வெற்றிநடை போட்டுவந்த ரஜினிக்கு பாட்ஷா படத்தில் இருந்து அரசியல் ஆசை தொடங்கியது.

நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அப்போது கருணாநிதி, ஜெயலலிதா எனும் இருபெரும் ஆளுமைகள் களத்தில் இருந்ததால் அரசியல் பிரவேசம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பேட்டியளித்த ரஜினி தான் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்றும், ஜனவரியில் கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். இத்தனை ஆண்டுகளாக தங்களது தலைவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கலக்கத்துடனே அவரது பிறந்தநாளை கொண்டாடி வந்த ரசிகர்கள் தற்போது கண்டிப்பாக கட்சி ஆரம்பிப்பார் என்ற முடிவுடன் இந்த பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.

ஒரு ரசிகனாக ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடிவந்த ரசிகர்கள் இந்தாண்டு அரசியல் கட்சி தொடங்கப்போவதாக ரஜினி அறிவித்ததை அடுத்து தனது தலைவனின் தொண்டனாக பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். இவர்களது ஆசைக்கும் ஆவலுக்குமான விடை ஜனவரி ஒன்றாம் தேதி தெரிந்துவிடும்.