நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் !

பிரேசில் நாட்டின் செயற்கைக்கோள் உட்பட 19 செயற்கைக்கோள்களைச் சுமந்துகொண்டு ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவண் விண்வெளி நிலையத்திலிருந்து பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது.இதற்கான கவுண்டவுன் இன்று காலை 8 .45 மணிக்கு தொடங்கியது.

2021-ம் ஆண்டில் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பும் முதல் ராக்கெட் இதுவாகும்.இந்த பிஎஸ்எல்வி-51 ராக்கெட் மூலம் பிரேசிலின் அமேசானியா செயற்கைக்கோள் மட்டுமின்றி, சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் எஸ்டி சாட் செயற்கைக்கோள் உள்ளிட்ட19 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட உள்ளன.

இதுகுறித்து என்எஸ்ஐஎல் நிறுவன இயக்குநர் ஜி.நாராயணன் கூறியது , பிரேசில் செயற்கைக்கோள் செலுத்தப்படுவதைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறோம். பிரேசிலில் உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோளை இந்தியா செலுத்துவது பெருமை.

இந்த செயற்கைக்கோள் 637 கிலோ எடை கொண்டதாகும். அமேசான் காடுகளின் சூழல், காடுகளை யார் அழிக்கிறார்கள், பிரேசில் நாட்டின் வேளாண் சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்ய இந்த செயற்கைக்கோள் பயன்படும் எனத் தெரிவித்தார்.