தினமும் 3 மணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்படும்

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தியாவின் மொத்த மின் தேவையில் 70 சதவீதம் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு தொடர்பான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிலக்கரி விநியோகம் முன்னேறாவிட்டால் அடுத்த இரண்டு நாட்களில் டெல்லியில் முழு மின் தடை ஏற்படும்.

டெல்லிக்கு மின்சாரம் விநியோகம் செய்யும் ஆலைகளில் போதிய நிலக்கரி இல்லை என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அம்மாநில முதல்வர் கடிதமும் எழுதியுள்ளார்.

சர்வதேச அளவில் நிலக்கரியின் விலை சுமார் 40 சதவீதம் உயர்ந்துள்ளதன் விளைவாக நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் அளவு கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் சரிந்துள்ளதாகவும் கூறப்படும் நிலையில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலக்கரித் தட்டுப்பாட்டால், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதற்கு ஏற்றவகையில், மின்தடைக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பல்வேறு மாநிலங்கள் அறிவித்து வருவதுடன், சில மாநிலங்கள் சுழற்சி முறையில் மின் தடையை அமல்படுத்தி வருகின்றன. தினமும் ஒரு மணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, தினமும் 3 மணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று பஞ்சாப் மாநில பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த முறை வருகிற புதன்கிழமை வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மாநிலம் முழுவதும் நிலக்கரி அடிப்படையிலான அனைத்து ஆலைகளும் கடுமையான நிலக்கரி பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது” என்று பஞ்சாப் மாநில பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் தலைவர் தெரிவித்துள்ளார்.