பதவியை ராஜினாமா செய்தார் பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அப்பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

பஞ்சாபில் அமரீந்தர் சிங் தலைமையில் காங்., ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. 2017 தேர்தலில் அமரீந்தர் சிங்கிற்காக பிரசாந்த் கிஷோரின் அணி பணியாற்றியது. வரும் தேர்தலிலும் கேப்டன் அமரீந்தர் சிங்கே முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளார். அதனை ஒட்டி கடந்த மார்ச் மாதம் பிரசாந்த் கிஷோரை தனது முதன்மை ஆலோசகராக நியமித்திருந்தார்.
இதற்கிடையே அமரீந்தர் சிங் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து இடையே மோதல் போக்கு காணப்பட்டது. சித்துவை பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக கட்சி மேலிடம் நியமித்தது. அவருக்கு பிரசாந்த் கிஷோரின் ஆதரவு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பஞ்சாப் முதல்வருக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார் பிரசாந்த் கிஷோர். அதில் “பொது வாழ்க்கையில் இருந்து தற்காலிக இடைவெளி எடுக்கும் எனது முடிவால், உங்கள் முதன்மை ஆலோசகர் பொறுப்பை என்னால் ஏற்க இயலவில்லை.
எனது எதிர்கால நடவடிக்கை குறித்து நான் இன்னும் முடிவு செய்யாததால், இந்த பொறுப்பிலிருந்து என்னை தயவுசெய்து விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்பொறுப்புக்கு என்னை கருத்தில் கொண்டதற்கு நன்றி” என கூறியுள்ளார்.