தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும் நாளையும் மழை

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும் நாளையும் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஆகஸ்ட் 7, 8 ஆகிய தேதிகளில் நீலகிரி கோயமுத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.