சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை

இந்தியாவின் முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்தியாவின் இரும்பு மனிதரும், முதல் துணை பிரதமருமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.

பட்டேல் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றடைந்த பிரதமரை முதலமைச்சர் விஜய் ரூபானி, ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் ஆகியோர் வரவேற்றனர்.

இன்று நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்திற்கு சென்ற மோடி, அங்கு பட்டேல் சிலைக்கு (ஒற்றுமைக்கான சிலை) மரியாதை செலுத்தினார். அங்கு தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பு நடைபெற்றது. இதனை பிரதமர் பார்வையிட்டார்.

அதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரும் சர்தார் படேலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிவிட்டு ட்விட்டர் பதிவில், ” ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் வாழும் இரும்பு மனிதரான சர்தார் படேலுக்கு மரியாதை. சுதந்திரத்திற்குப் பிறகு நூற்றுக்கணக்கான சுதேச மாநிலங்களாக சிதறியிருந்த இந்தியாவை ஒன்றிணைத்த பின்னர், இன்றைய வலுவான இந்தியாவுக்கு அடித்தளம் அமைத்தவர். இந்தியா தனது உறுதியான தலைமை, தேசிய அர்ப்பணிப்பை ஒருபோதும் மறக்காது ” என்று பதிவிட்டுள்ளார்.

“தொலைநோக்கு சிந்தனையுடன், சர்தார் படேல் நவீன சிவில் சேவைகளை முறைப்படுத்தினார். நாடு அமைதியுடன் வளர்ச்சியின் பாதையில் நகர்கிறது, இதனை செயல்படுத்தி காட்டிய பெருமை அனைத்தும் தைரியமான தலைமைக்கு செல்கிறது” என்று மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா ட்வீட் செய்துள்ளார்.

இந்தியக் குடியரசைக் கட்டியெழுப்ப சுதந்திரத்திற்கு முந்தைய நாட்டின் அனைத்து 562 மாகாணங்களையும் ஒன்றிணைத்தவர் என்ற பெருமை பெற்ற சர்தார் படேல், டிசம்பர் 15, 1950 அன்று காலமானார்.