40.56 கோடி வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்திய ஜியோ; லாபம் மும்மடங்கு உயர்வு!

40.56 கோடி வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்திய ஜியோ தனது இரண்டாவது காலாண்டில் ரூ.2,844 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. நிறுவனத்தின் லாபம் 33 சதவீதம் உயர்ந்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான இரண்டாவது காலாண்டு நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை (அக்.30) வெளியானது.

இக்காலக்கட்டத்தில் நிறுவனம் ரூ.2,844 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் நிறுவனத்தின் நிகர வருவாய் ரூ.990 கோடியாக இருந்தது.

அந்த வகையில் நிறுவனத்தின் லாபம், மும்மடங்கு உயர்ந்துள்ளது. இதேபோல் அரையாண்டு வரையிலான வருவாயும் ரூ.13 ஆயிரத்து 130 கோடியிலிருந்து ரூ.17 ஆயிரத்து 481 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொத்த சந்தாதாரர்கள் 40.56 கோடியை எட்டியுள்ள நிலையில், சந்தாதாரர்களின் வளர்ச்சி 15.9 சதவீதமாக உள்ளது.

ஜூலை மாதத்தில் 35.54 கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருந்த ஜியோ, செப்டம்பர் இறுதிக்குள் 40 கோடி வாடிக்கையாளர்கள் என்ற இலக்கை எட்டி பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.