இந்தியாவின் முதல் கடல் விமான சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர்!

முன்னாள் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேலின் 145ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, அஞ்சலி செலுத்த உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். தனது பயணத்தின் முதல் நாளான நேற்று, ஆரோக்கிய வான், ஏக்தா மால், குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்கா, சர்தார் படேல் விலங்கியல் பூங்கா (ஜங்கிள் சஃபாரி) உள்ளிட்ட 17 புதிய திட்டங்களையும், படகு சவாரி ஒன்றையும் தொடங்கி வைத்தார்.

குஜராத் பயணத்தின் இறுதி நாளான இன்று சபர்மதி ஆற்றங்கரைக்கு இடையே புகழ்பெற்ற இந்தியாவின் முதல் கடல் விமான சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதற்காக, சர்தார் சரோவர் அணைக்கு அருகிலுள்ள ஏரியில் மிதக்கும் தளம் கொண்ட நீர் ஏரோட்ரோம் கட்டப்பட்டுள்ளது. கடல் விமானம் – இரட்டை ஒட்டர் 300 ஸ்பைஸ்ஜெட் மூலம் இயக்கப்படும் என்று பாதுகாப்பு பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக கடல் விமானம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றில் இருந்து நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியா காலனியில் உள்ள ஒற்றுமை சிலைக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, மத்திய ஆயுத காவல்படை (சிஏபிஎஃப்), குஜராத் காவல்துறை மற்றும் ஏக்தா திவாஸ் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரதமர் பின்னர் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் சிவில் சர்வீசஸ் ப்ரொபஷனர்களுடன் கலந்துரையாட உள்ளார்.

தனது பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து பிரதமர் டெல்லி புறப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.