Bjp Protest: தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி (Bjp Protest) அம்மன் கோயிலில் 84 ஆண்டுகளாக நடந்து வரும் இந்து சமய மாநாட்டுக்கு அனுமதி வழங்காததை கண்டித்து மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழாவையொட்டி கோயில் வளாகத்தில் இந்து சமய மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இவை கடந்த 1936-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டை இந்து சேவா சங்கம் மற்றும் அறநிலையத்துறை இணைந்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த ஆண்டு 86வது மாநாடு மார்ச் 5ம் தேதி முதல் 14ம் தேதி வரையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டிக்கும் விதமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மாநாடு நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோஷங்களையும் முன்வைத்தனர். மேலும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.