Human Chain: வனவிலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தி மாணவர்கள் மனித சங்கிலி

திருப்பூர்: உலக வனவிலங்குகள் தினத்தையொட்டி (Human Chain) திருப்பூரில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சார்பில் வனவிலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தி முகமூடி அணிந்தும், மனித சங்கிலி அமைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வனச்சரக அலுவலர் சுரேஷ்கிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். வனச்சரக அலுவலர் கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3ம் தேதி உலக வனவிலங்கு தினம் அனுசரிக்கப்படுகிறது. இது பூமியில் உள்ள விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் எதிர்கொள்கின்ற ஆபத்துகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், உலகின் காட்டு விலங்கினங்கள் மற்றும் தாவரங்களைப் பற்றிய விழிப்புணர்வை கொண்டாடுவதும் வளர்ப்பதும் இந்த நாளின் நோக்கமாகும்.

மேலும் பறவைகளும், விலங்குகளும் மனிதன் தோன்றுவதற்கு முன்னரே பூமியில் தோன்றியுள்ளது. அவைகள் மனிதனை நம்பி வாழ்வது இல்லை. மனிதர்கள் தான் அவைகளை நம்பி வாழவேண்டும். எனவே வன உயிரினங்களை பாதுகாப்பது நமது கடமை ஆகும் என்றார். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் வனவிலங்குள் முகமூடி அணிந்து மனித சங்கிலி அமைத்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.