தமிழகத்தில் பிளஸ்டூ தேர்வு ரத்து

CBSE 12 ஆம் வகுப்பு பருவம் 1

தமிழகத்தில் பிளஸ்டூ தேர்வு ரத்து செய்யப்படுவதாக இன்று இரவு (ஜூன்.5) முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எனவும் தெரிவித்தார்.

கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி தேர்வுகள், பொதுத் தேர்வுகள் நடத்தப்பட வில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, நாடு முழுதும் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். பல்வேறு மாநிலங்களின் பாட திட்டத்திலும், பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து பள்ளி வாரியாக மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.

கொரோனா ஊரடங்கால் பல ஊர்களுக்கு இடம் மாறியுள்ள குடும்ப மாணவர்களின் நிலை என்ன; தேர்வுக்கு மனதளவில் மாணவர்கள் தயாராக உள்ளனரா என்பவை குறித்து கல்வியாளர்களும், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளும் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, இன்று தமிழக சட்டசபையில் இடம்பெற்றுள்ள கட்சி பிரதிநிதிகளிடம், அமைச்சர் மகேஷ் கருத்து கேட்டார்; 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.இதையடுத்து, மருத்துவ நிபுணர்கள் மற்றும் உளவியல் ஆலோசகர்களுடன், அரசு தரப்பில் கருத்து கேட்கப்பட்டது. அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம், இன்று மாலை அமைச்சர் மகேஷ் ஒப்படைத்தார்.

இந்த அறிக்கை அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இன்று ஆலோசனை நடத்தினார்.இதையடுத்து பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.