பகுத்தறிவு பகலவன் பெரியாருக்கு இன்று பிறந்தநாள்

பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ வே ராமசாமி 1879 ஆம் ஆண்டு செப்.17 அன்று ஈரோட்டில் பிறந்தார். ஈரோடு வெங்கட்ட ராமசாமி நாயக்கர் என்ற இயற்பெயரை கொண்ட பெரியார் தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்டவர். இவரது தந்தை வெங்கட்ட நாயக்கர் பெரும் சரல்வந்தர் ஆவார்.

இளம் வயதிலேயே பெரியார் சுய மரியாதை கொள்கைகளை கடைபிடித்தார். 1904இல் பெரியார் காசிக்கு புனித யாத்திரை சென்றார். அங்கு நடக்கும் மனிதாபிமானமற்ற செயல்கள் மற்றும் பிச்சை எடுத்தல் ஆகியவற்றை கண்டு மனம் பொங்கினார். காசியில் நடந்த பல சம்பவங்கள் பெரியாரை இறை மறுப்பாளராக மாற்றியது. 1919 ல் வணிக தொழிலை நிறுத்தி விட்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தான் வகித்து வந்த ஈரோடு நகராட்சித் தலைவர் பதவியைத் துறந்தது மட்டுமில்லாது தன்னை முழுமனத்துடன் காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.

காந்தியடிகளின் கதர் ஆடையை அவரும் உடுத்திக் கொண்டது மட்டுமில்லாமல் பிறரையும் உடுத்தும்படி செய்தார் . கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்தி மறியல் செய்தார். வெளிநாட்டுத் துணிவகைகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் நடத்தினார். தீண்டாமையை வேரறுக்க பெரும்பாடு பட்டார். 1921 ஆம் ஆண்டு ஈரோடு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டதற்காக சிறை சென்றார். கேரளாவில் உள்ள வைக்கம் எனும் சிறிய நகர் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ளது . கேரள வழக்கப்படி அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்களும் ஈழவர்களும் கோவிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.

1924 ல் சாதி எதிர்ப்புகள் வலுத்து வந்த சமயமாதலால் சாதி எதிர்ப்புப் போராட்டத்தை காந்திய வழி நடத்த வைக்கம் சிறந்த இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த வைக்கம் போராட்டத்தில் தமிழகத்திலிருந்து பெரியாரும் கலந்து கொண்டு சிறை சென்றார். பெரியார் போன்ற பல காந்தியவாதிகள் இந்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்ட காரணத்தால் இந்த சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது அதுமுதல் பெரியார் வைக்கம் வீரர் என்று அழைக்கப்படுகிறார்.

1944இல் திராவிடர் கழகத்தை தோற்றுவித்தார். பெண்கள் உரிமை பெண் கல்வி பெண்கள் விருப்பத்திற்கு திருமணம் கைம்பெண் மறுமணம் ஆதரவற்றோர் திருமணம் ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்திய பெரியார் இன்றளவும் பெண்ணுரிமைப் போராளியாகவே இன்றளவும் கருதப்படுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here