கடந்த 6 மாதத்தில் 11 லட்சம் ரெம்டெசிவர் மருந்துகளையும், ஜனவரி முதல் மார்ச் மாதத்துக்குள் 6 கோடி தடுப்பூசிகளையும் ஏற்றுமதி செய்தால் தட்டுப்பாடு வராதா, உலகிலேயே அதிகமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நமக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது ஏன் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 6 மாதத்தில் மட்டும் 11 லட்சம் ரெம்டெசிவர் மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. ஜனவரி மார்ச் மாதத்தில் மட்டும் 6 கோடி தடுப்பூசிகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இவ்வாறு செய்தால் பற்றாக்குறை வராதா?
இந்தத் தடுப்பூசிகளை வைத்து 4 கோடி இந்தியர்களுக்குத் தடுப்பூசி செலுத்திவிடலாம். ஏன் இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை?
மோசமான திட்டமிடல் காரணமாகத்தான் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சரியான நிர்வாகத் திறமை இல்லாததால்தான் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த மத்திய அரசின் தோல்விதான்.
நாடு முழுவதும் கரோனா பரிசோதனையை ஏன் தீவிரப்படுத்தவில்லை, ஏன் ஆன்டிஜென் பரிசோதனை நடத்தவில்லை, ஏன் குறைத்துக் காட்டப்பட்டது? தனியார் ஆய்வுக்கூடங்கள் பரிசோதனை நடத்தக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. மக்களின் உயிர் முக்கியமா அல்லது கரோனா லட்சக்கணக்கில் அதிகரித்து வருவதால் உங்கள் அரசு குறித்து நீங்கள் கட்டமைத்துள்ள தோற்றம், மரியாதையைக் குலைத்துவிடும் என்று அச்சப்படுகிறீர்களா?”



