ஆன்லைன் மூலம் செல்போன் ஆர்டர் செய்ததால் வந்த விபரீதம்

இமாசலபிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள அனு கிராமத்தைச் சேர்ந்தவர் சசி தாக்கூர். இவர் சமீபத்தில், இணையதளம் ஒன்றின் வாயிலாக ஒரு பிரபல நிறுவன செல்போனுக்கு ஆசை ஆசையாய் ஆர்டர் கொடுத்தார். அந்த செல்போனுக்கான விலை ரூ.15 ஆயிரம், டெலிவரி கட்டணத்தையும் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தினார்.

சில நாட்களில் சசி தாக்கூரின் வீடு தேடி ‘செல்போன் பெட்டி’ வந்தது. ஆவலாய் அதைப் பிரித்த அவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி. உள்ளே இருந்தது, நவீன மாடல் செல்போன் அல்ல, ‘வெங்காயங்கள்’.

வெறுத்துப்போன சசி தாக்கூர், குருகிராமில் உள்ள அந்த செல்போன் நிறுவனத்துக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னார். இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக ஒரு புகார் அனுப்பிவையுங்கள், 10 நாட்களில் உங்களுக்கு புதிய செல்போன் அனுப்பப்படும் என்று கூறியிருக்கிறார்கள்.

சசி தாக்கூரும் புகார் அனுப்பிவிட்டு, புதிய போனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

ஆன்லைன் மூலம் ஆர்டர் கொடுப்பதில் ஆர்வம் காட்டுபவர்கள் எவ்வளவு தூரம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் மற்றும் ஒரு சாட்சி.