உடல் எடை குறைந்த கிம் ஜாங்

வடகொரியாவின் தலைவர், கிம் ஜாங் உன், 37, திடீரென உடல் எடை குறைந்து மெலிந்துள்ளார். உடல்நிலை பாதிப்பால் மெலிந்தாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.


மேற்காசிய நாடான வடகொரியாவின் தலைவராக, 2011ல் கிம் ஜாங் உன் பொறுப்பேற்றதில் இருந்து, அவரை சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருந்து வருகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி, அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டார்.

கடந்த ஆண்டில், அவர் திடீரென மாயமானார். அவருடைய உடல்நிலை குறித்து பல வதந்திகள், செய்திகள் பரவின. ஆனால், திடீரென அவர் பொது நிகழ்ச்சியில் பங்கேற்று, யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில், மீண்டும் அவருடைய உடல்நிலை குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. கிம் ஜாங் உன், 5 அடி 8 அங்குலம் உயரமும், 140 கிலோ எடையும் உடையவர் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அதில், அவர் உடல் மெலிந்து காணப்படுகிறார். 20 கிலோ வரை எடை குறைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, உடல் நலத்தை பேணுவதற்காக உடல் எடையை குறைத்தாரா அல்லது உடல் நல பாதிப்பால் உடல் எடை குறைந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மது மற்றும் புகை பழக்கம் உள்ள கிம் ஜாங் உன்னுக்கு அவருடைய தாத்தா, தந்தை ஆகியோரை போன்று இதய பிரச்னை இருக்கும் எனக் கூறப்படுகிறது.