ஆம்போடெரசின்-பி மருந்துக்கு இறக்குமதி வரி கிடையாது

கறும்பூஞ்சை தொற்றுக்கு தேவையான ஆம்போடெரசின்-பி மருந்தை இறக்குமதி வரியின்றி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய டில்லி உயர் நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களில் ஆயிரக்கணக்கானோர் கறும்பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை, வெள்ளைப் பூஞ்சை நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இந்தத் தொற்றைக் குணப்படுத்தும் ஆம்போடெரசின்-பி மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. இதை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முயன்றால், இறக்குமதி வரி 28 சதவீதத்துக்கு மேல் இருக்கிறது. இதையடுத்து, இம்மருந்தை இறக்குமதி செய்யும்போது வரிவிலக்கு அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் விபின் சாங்கி, ஜஸ்மீத் சிங் ஆகியோர் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அமர்வு கூறுகையில், ‘கறும்பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காக்க மருந்து அவசியம். இந்தியாவில் இந்த மருந்துக்கு தட்டுப்பாடு நிலவும்போது, 28 முதல் 78 சதவீதம் வரை வரி விதிக்க கூடாது. இறக்குமதி வரியை தள்ளுபடி செய்வது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.

தனிநபர் யாரேனும் ஆம்போடெரசின்-பி மருந்தை இறக்குமதி செய்தால் அவரை அனுமதிக்க வேண்டும். உறுதிமொழிப் பத்திரத்தை இறக்குமதியாளர் வழங்கிவிட்டு, மத்திய அரசு முடிவு எடுக்கும்வரை வரி இல்லாமல் இறக்குமதி செய்யலாம். ஒருவேளை இறக்குமதி வரியை மத்திய அரசு தள்ளுபடி செய்யாவிட்டால், இறக்குமதியாளர் வரி செலுத்த வேண்டும். மத்திய அரசு இறக்குமதி வரித் தள்ளுபடி அளிக்கும் என நம்புகிறோம்’ என்றனர்.