இறுதி கட்டத்தில் நிரவ் மோடி வழக்கு

வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வைர வியாபாரி நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இன்று விசாரிக்கப்படுகிறது. இதையடுத்து வழக்கு இறுதிகட்டத்தை எட்ட உள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி பிரிட்டனின் லண்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தி வருவதற்கான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த வழக்கில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை ஏற்பது குறித்து வெஸ்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடி ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இந்த ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்கும் பட்சத்தில் இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு துவக்கத்தில் அவரை நாடு கடத்துவது தொடர்பான கடைசிகட்ட விசாரணை நடைபெறும்.நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததும் பிரிட்டன் உள்துறை செயலர் பிரீதி படேல் நாடு கடத்துவதற்கான உத்தரவை பிறப்பிப்பார். அதனால் அடுத்தாண்டு துவக்கத்தில் நிரவ் மோடி இந்தியாவுக்கு நாடு கடத்தி வரப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.