தலிபான் அரசின் தலைவராக முல்லா ஹெபத்துல்லா தேர்வு

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். இதனால் அங்கு வசித்து வந்த வெளிநாட்டினரை அந்தந்த நாடுகள் திரும்ப அழைத்து சென்றுள்ளன. அங்கு முகாமிட்டிருந்த அமெரிக்க படைகளும் நாடு திரும்பி விட்டன.

தலிபான்களும் தங்கள் அரசின் உச்சபட்ச தலைவராக மூத்த மத தலைவரான முல்லா ஹெபத்துல்லா அகுந்த்ஸடாவை (வயது 60) தேர்ந்தெடுத்து உள்ளனர். இவர் காந்தஹாரில் இருந்து செயல்படுவார்.

இதைப்போல தலிபான்களின் அரசு கட்டமைப்பில் மாகாணங்களுக்கு கவர்னர்களும், மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட கவர்னர்களும் தலைவராக இருப்பார்கள்.

இந்த கவர்னர்கள், போலீஸ் தலைவர்கள் மற்றும் மாகாண, மாவட்ட கமாண்டர்களை தலிபான்கள் ஏற்கனவே நியமித்து உள்ளனர்.

அதேநேரம் புதிய நிர்வாக அமைப்புக்கான பெயர், தேசியக்கொடி மற்றும் தேசிய கீதம் ஆகியவை இன்னும் முடிவு செய்யப்படவில்லை.