பஞ்சாப் மாநில விவசாயிகள் தவறாக வழிநடத்தப்பட்டுதான் புதிய வேளாண் சட்டங்களை எதிர்க்கிறார்கள் !

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.புதிய இந்தியா சமாச்சார், விவசாயிகளின் நலன் காக்கும் மோடி அரசு போன்ற புத்தகங்களை மேடையில் அறிமுகம் செய்தார்.

பின்னர் பேசிய மத்திய அமைச்சர், நடந்து முடிந்த பிகார் சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது முறையாக என்டிஏ கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.பெரும்பாலான கட்சிகள் நாட்டில் குடும்பக் கட்சிகளாக உள்ளன. வரவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் குடும்ப அரசியல் இனிமேலும் எடுபடாது.

பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் விவசாயிகளுக்காகவும், வேளாண் துறைக்காகவும் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.மேலும் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ள வேளாண்மை ஊக்க உதவித் திட்டத்தின் மூலம் 18 ஆயிரம் கோடி புதிய தவணைத் தொகை பரிவர்த்தனை செய்யப்பட்டு அதன் வாயிலாக 9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் பணம் சென்று சேர்ந்துள்ளது.

மேலும், தவறாக வழிநடத்தப்பட்டுள்ள பஞ்சாப் மாநில விவசாயிகளைத் தவிர வேறு எந்த மாநில விவசாயிகளும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடவில்லை.வேளாண் சட்டங்கள் உடனுக்குடன் செயல்படுத்தப்பட்டவை அல்ல, ஏறத்தாழ 20 ஆண்டுகள் கலந்தாலோசித்து பல தரப்பினரிடம் கருத்துக்கேட்பு நடத்திய பின்னரே வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் வேளாண் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தங்கள் கூட்டணி அதிமுகவுடன் முடிவு செய்யப்பட்டிருந்தாலும், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் எனத் தெரிவித்தார்.