திமுக கிராம சபை என்பது ஒரு நாடகம் -அமைச்சர் தங்கமணி !

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கபிலர் மலை அருகே பெரிய சோளிப்பாளையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து 20 கர்ப்பிணிகளுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர், கரோனா பாதிப்பினால் பொங்கல் பரிசு தொகை 2500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சியினர் பொய் பரப்புரை செய்து வருகின்றனர். மின்வாரிய தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு அவர்களை அழைத்திருந்தேன், தற்போது வரை அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர மறுத்து விட்டனர்.

நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை வாபஸ் பெற்றால் கேங்மேன் பணிகளை நிரப்பப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.கேங்மேன் தேர்வு எழுதியிருந்த தேர்வாளர்கள் தொழிற்சங்கத்தினரை சந்தித்து வழக்கை வாபஸ் பெற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனால் தான் கேங்மேன் பணி நிரப்புவதில் தாமதம் ஏற்படுகிறது. இருப்பினும் சட்டரீதியாக மின்சார வாரியம் செயல்பட்டு கேங்மேன் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்.திமுக கிராம சபை கூட்டம் நடத்துவது குறித்த கேள்விக்கு,அரசு திட்டங்களால் மக்கள் பயன்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாத திமுகவினர் அரசியல் காரணங்களுக்காக கிராம சபை என்ற பெயரில் நாடகம் நடத்தி வருகின்றனர் என விமர்சித்தார்.