மெரினாவில் மக்களுக்கு அனுமதி இல்லை- சென்னை மாநகராட்சி திட்டவட்டம்

மெரினா கடற்கரைக்கு மக்களை அனுமதித்தால் கொரோனா வைரஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மெரினாவில் மக்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மெரினா கடற்கரையை தூய்மை படுத்துவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, குறித்த வழக்கில் ஊரடங்கு இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், மெரினாவில் பொதுமக்களை அனுமதிக்க முடியாது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மெரினாவில் ஆக்கிரமிப்புகள் முளைத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இதை எப்படி சரி செய்யப் போகிறீர்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளிக்க அரசுத்தரப்பு வழக்கறிஞர், ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டு விட்டன என்றார்.

மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ஆக்கிரமிப்புகள் மண்டல உதவி ஆணையர் தலைமையிலான குழு லூப் சாலையில் 65 ஆக்கிரமிப்புகள் அகற்றியதாகவும், வாழ்வாதாரம் இழந்ததால் வியாபாரம் செய்ய வந்து விட்டதாகவும், மீனவர் சங்க தலைவர்களுடன் கலந்து பேசி, இனிமேல் ஆக்கிரமிப்புகள் முளைக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.

பின்னர் மீன் சந்தை அமைப்பது, நடை மேம்பாலம் அமைப்பது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பிய போது, நிலத்தை வகை மாற்றம் செய்வது தொடர்பான கோப்பு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து நவம்பர் 11ம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மெரினா கடற்கரையில் பொது மக்களுக்கு எப்போது அனுமதி வழங்கப்படும் என நீதிபதிகள் கேட்டதற்கு பதிலளித்த ஆணையர் பிரகாஷ், மெரினாவில் அனுமதி வழங்கினால் ஏராளமான மக்கள் கூடிவிடுவர் எனவும், மெரினாவில் மக்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மெரினாவில் நவம்பர் மாதம் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகளை மேம்படுத்த வேண்டும் எனவும், மெரினாவை தூய்மையாக வைக்க ஏதுவாக கடற்கரையில் தினமும் காலை, மாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும்படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கும், காவல் துறை ஆணையருக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
நீதிபதிகளும் நடை பயிற்சி செய்தால் எல்லாம் சரியாகும் எனவும் தெரிவித்தனர்.

பின்னர் வழக்கு விசாரணையை நவம்பர் 11ம் தேதி தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினமும் காணொளியில் ஆஜராக இரு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here