மலையாள நடிகர் சங்கத்திலிருந்து நடிகை பார்வதி விலகல்

மலையாள நடிகர் சங்கத்திலிருந்து நடிகை பார்வதி விலகி உள்ளார்.

2017ஆம் ஆண்டு மலையாள திரையுலகின் பிரபல நடிகை கடத்தப்பட்ட சம்பவம் அம்மா சங்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதில் முக்கிய குற்றவாளியாக பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். ஆனால் அப்போதும் அவரை சங்கத்தில் இருந்து நீக்காமல் அவருக்கு சாதகமாக அம்மா சங்கம் செயல்பட்டதாகக் கூறி பல பிரபல நடிகைகள் தனியாக ஒரு சங்கம் தொடங்கினர்.

ரீமா கல்லிங்கல், மம்தா மோகன் தாஸ், ரம்யா நம்பீசன் போன்றோர் அம்மா சங்கத்திலிருந்து விலகி பெண்கள் கூட்டமைப்பைத் தொடங்கினர். ஆனால் நடிகை பார்வதி அப்போதும் அம்மாவில் இருந்து விலகாமல் 2 அமைப்பிலும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று அம்மா சங்கத்தின் பொதுச் செயலாளர் எடவேலா பாபு பேசிய ஒரு கருத்து பார்வதியை கோபத்தின் உச்சிக்குக் கொண்டு சேர்த்துள்ளது.

2018ஆம் ஆண்டு சங்கத்துக்கு நிதி திரட்ட ’ட்வெண்டி 20’ என்ற திரைப்படத்தை அம்மா தயாரித்தது. அதில் கடத்தப்பட்ட பெண் நடிகை ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதே படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது அம்மா தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த படத்திலும் கடத்தப்பட்ட நடிகை நடிப்பாரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள எடவேலா பாபு, “அவர் சங்கத்தில் தற்போது உறுப்பினராக இல்லை. இறந்த ஒன்றை மீண்டும் கொண்டு வருதல் சரியாக இருக்காது” என்றார்.

இதற்கு தனது பேஸ்புக் பக்கத்தில் காட்டமாக பதிலளித்துள்ள நடிகை பார்வதி, “நண்பர்கள் பலர் அம்மாவில் இருந்து விலகியபோதும் சங்கத்தை மீட்டெடுக்க யாராவது ஒருவர் வேண்டுமே என்ற நம்பிக்கையில் நான் தொடர்ந்து வந்தேன். ஆனால் எடவேலா பாபுவின் கருத்துக்கு பின் அந்த நம்பிக்கை சுத்தமாக போய்விட்டது” என்று எழுதியுள்ளார்.

மேலும், எடவேலா பாபுவுவின் கருத்துக்கு சங்க உறுப்பினர்களும் துணை போவார்கள். அதனால் நான் இனிமேலும் அம்மாவில் நீடிக்க விரும்பவில்லை என்று பார்வதி பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் எடவேலா பாபு பதவி விலக வேண்டும் என்றும் நடிகை பார்வதி வலியுறுத்தியுள்ளார். பழம்பெருமை வாய்ந்த அம்மா சங்கத்தில் பார்வதியின் ராஜினாமா மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து எடவேலா பாபு “நான் யாரையும் அவமதிக்கவில்லை. நேர்காணலில் எனது கருத்துக்களை பார்வதி தவறாக புரிந்து கொண்டார்” என்று கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here