கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் ஒருவர் உயிரிழப்பு

கொரோனா தடுப்பூசிக்கு பிந்தைய, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அலர்ஜியால் ஒருவர் பலியானதை, மத்திய சுகாதார அமைச்சக குழு உறுதி செய்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிலர், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஒரு வகை அலர்ஜியால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களில் சிலர் பலியானதாகவும் பொதுமக்களிடையே அச்சம் எழுந்தது. இதையடுத்து, தடுப்பூசிக்கு பிந்தைய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய, மத்திய சுகாதார துறை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவினர் தடுப்பூசிக்கு பின் அலர்ஜியால் பலியானதாக கூறப்படும், 31 பேரின் உடல்களில் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அவர்களில், மார்ச் 8ல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட, 68 வயது நபர் மட்டுமே, தடுப்பூசிக்கு பிந்தைய, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஒரு வகை அலர்ஜியால் பலியானதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதுவரை, 26 ஆயிரத்து, 200க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிக்கு பிந்தைய அலர்ஜி ஏற்பட்டதாக, மத்திய சுகாதார துறை கூறி உள்ளது. இருப்பினும் இதனால் மரணம் ஏற்படுவது மிக மிக அரிதானது என, ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.