இனி தங்கத்தில் ஏமாறாமல் இருக்க ஹால்மார்க் முத்திரை கட்டாயம்..!

உலக அளவில் தங்கத்தை ஆபரணமாக பயன்படுத்தும் நாடுகளில் முதலிடத்தில் இந்தியா உள்ளது. இதனால் ஆண்டுதோறும் இந்தியாவில் தங்கத்தின் தேவை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியா ஆண்டுக்கு 700 டன் முதல் 800 டன் வரையிலான தங்கத்தை இறக்குமதி செய்கிறது.

ஹால்மார்க் முத்திரை இல்லாமலேயே பெரும்பாலான வியாபாரிகள் நகைகளை விற்பனை செய்வதால், 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஹால்மார்க் முத்திரையுடன் தான் நகை விற்பனை செய்யப்பட வேண்டும் என கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

அச்சமயம் கொரோனா பரவல் அதிகரித்ததால், கால அவகாசத்தை நீடிக்க வேண்டுமென நகை விற்பனையாளர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, ஆறு மாதம் அதாவது ஜூன் 15ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்தது.

மத்திய அரசு கொடுத்த கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்து விட்டது. இதனால், தற்போது தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரையிடுவது கட்டாயம் என்று நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. ஹால்மார்க் முத்திரையை பதிப்பதன் மூலமாக குறைந்த தரத்தில் தங்கம் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் குறைந்த தரத்தில் நகை வாங்கி மக்கள் ஏமாற்றப்படுவது தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.